Wednesday, April 30, 2014

டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன் எடுக்கணுமா?



பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம் வரலாம். முதலுதவியாக தலையில் அடிபட்ட இடத்தில் ice  வைக்கலாம் இது வீக்கம் ஏற்படுவதையும் வலியையும் குறைக்கும். அழுத்தி தேய்க்க கூடாது
இந்த குழந்தைகளுக்கு தலைக்கு ஸ்கேன் தேவை இல்லை

கீழே விழுந்தவுடன் குழந்தை மயக்கமடைந்து சுய நினைவு இல்லாமல் போனால்

கீழே விழுந்த பின் தொடர்ந்து வாந்தி எடுத்தால்

வலிப்பு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு தேவை எனில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்வார்.

பெரும்பாலான பெற்றோர்களின் பயம் தலையில் அடிபட்டால் பிற்காலத்தில் ஏதேனும் தொந்தரவு வருமோ என்பதுதான். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாமல் பிற்காலத்தில் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பெற்றோரின் அடுத்த கேள்வி

ஸ்கேன் எடுத்துட்டா நிம்மதியா பயம் இல்லாம இருக்கலாம் இல்லையா?

C T ஸ்கேன் என்பது கதிர்வீச்சு (X - Ray ) கொண்டு உடலின் உறுப்புகளை படம் பிடித்து காட்டுகிறது.இந்த X - Ray வை  உடலில் செலுத்தி தான் ஸ்கேன் எடுக்க படுகிறது. இந்த கதிர்வீச்சினால் உடலில் பல தீமைகள் ஏற்படலாம்


அதிகபடியான கதிர் வீசினால் வாந்தி, தலைவலி மயக்கம் போன்றவை உடனடியாக ஏற்படலாம்

பிற்காலத்தில் இரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்புகள் அதிகம்.
கதிர்வீச்சினால் மரபணுக்கள் சேதமடையலாம். இதனால் அடுத்த சந்ததியினர் பிறவி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது

எங்களது பயத்தை போக்க வழியே இல்லையா டாக்டர்?

MRI  ஸ்கேன் என்பது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது. ஆனால் கட்டணம் சற்று அதிகம்.







Saturday, April 5, 2014

தலையில் பேன்



இது ஒரு ஒட்டுனியால் வருகிறது.அதன் பெயர் pediculus humanus capitis

இது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது



இது மனித உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கிறது. ஒரு பேன் 5 முறை தினமும் இரத்தம் குடிக்குமாம். ஒவ்வொரு முறையும் 0.00005ml இரத்தத்தை குடிக்குமாம். (இது அந்நியன் ஸ்டைல் : 5 பைசா திருடினா தப்பா? 5 லட்சம் பேர் 5 தடவை  5 பைசா திருடினா தப்பா?) இதனால் இரத்த சோகை ஏற்படலாம்




இதனால் தலையில் அரிப்பு, சிவப்பாகுதல், பாக்டீரியா கிருமி தாக்கம் கழுத்தில் நெறி கட்டுவது போன்ற அறிகுறிகள் காணப்படும் சில நேரங்களில் பேன் முட்டைகள் முடியில் ஒட்டி கொள்ளும் இதனை NITS  என்பர்.
சில நேரங்களில் இந்த கிருமி கண் இமையில் ஒட்டிக்கொண்டு எளிதில் எடுக்க முடியாத வண்ணம் இமைகள் ஒட்டிக்கொள்ளும்.

என்ன செய்வது?

பெர்மெத்ரின் (PERMETHRIN ), LINDANE SHAMPOO, GAMMA BENZENE  HEXACHLORIDE  போன்றவை பயன்படுத்தலாம்
இந்த மருந்துகளை தலை முடியில் தடவி 1மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் குடும்பத்தில்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதனை பயன்படுத்தவும்

ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவது அவசியம்

குழந்தையின் உடைகளை, பெட்சீட் போன்றவைகளை  கொதிநீரில் ஊறவைத்து உலரவைக்கவும்.

Wednesday, March 19, 2014

தலையில் பத்து பிடித்தல் (CRADLE CAP/ SEBORRHEIC DERMATITIS)



பச்சிளம் குழந்தைகளுக்கு தலையில் கருப்பாக அழுக்கு  போல படிந்து இருக்கும்

என்ன செய்வது?

தலைக்கு பவுடர் அடிக்காதீர்கள்

தலைக்கு SELINIUM   SULFIDE  ஷாம்பு அல்லது  KETOKONAZOLE  ஷாம்பு     உபயோகிக்கலாம்

கடினமான பத்தை எடுக்க OLIVE  OILஅல்லது தேங்காய் எண்ணெய்  தடவி ஊறவைத்து பிறகு ஷாம்பு உபயோகிக்கலாம்


வாரத்திற்கு 2 - 3 தடவை தலைக்கு ஷாம்பு உபயோகிக்கலாம்

தலைக்கு STEROID CREAM உபயோகிப்பதை தவிர்க்கவும் 

Tuesday, March 18, 2014

சிறுநீர் போகும்போது அழும் குழந்தை



பச்சிளம் குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது  அழுது கொண்டு இருக்கும். இது இயல்பான ஒன்று, இதற்கு கவலைப்பட தேவையில்லை. ஆனால் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலோ, வாந்தி, பால் சரியாக குடிக்க வில்லை என்றாலோ உடனே மருத்துவரை அணுகவும்.

வெயில் நாட்களில் சில குழந்தைகள்
 சிறுநீர் அளவு குறைவாக செல்லும்
போது அழுவார்கள். இதற்க்கு நிறைய தண்ணீர்,
 ஜுஸ், மோர் தர்பூசணி
போன்றவை கொடுத்தால் சரியாகி விடும்.




URINARY  INFECTION இருந்தால் குழந்தைகளுக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக, அடிக்கடி  வரும்.  சிறுநீர் போகும்போது குழந்தை அழுது  கொண்டே இருக்கும்.ஜுரம் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்படலாம்


சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் கல் இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் போது குழந்தைகள் அழும்

குழந்தைகளின் பிறப்பு உறுப்பில் ஏதேனும் காயம் அல்லது RASH இருந்தாலும் குழந்தை அழுது கொண்டே சிறுநீர் கழிக்கும். 

Saturday, October 8, 2011

sleepy time !!!

தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கும், மூளை சுறுசுறுப்பு திறனுக்கும் மிகவும் அவசியமானது. நமது மூளையின் நினைவாற்றலை short term memory மற்றும் long term memory என பிரிக்கலாம்.  short term memory என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் நினைவில் இருக்கும். ஆனால் long term memory என்பது நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்கும், தூக்கம் நாம் கற்று கொண்ட ஒரு விஷயத்தை short term memory இலிருந்து  long term memory ஆக  மாற்றுவதற்கு  உதவி செய்கிறது 

குழந்தைகள் எவ்வளவு  நேரம் தூங்க வேண்டும்  என எனது பழைய பதிவில் கூறி இருக்கிறேன். தூக்கம் நன்றாக வரும் குழந்தையை படுக்கையில் படுக்க வைத்தால் சிறிது நேரம் புரண்டு அழுதுவிட்டு தூங்கிவிடும்.  குழந்தைகள் தூக்கத்திற்கு அழும்போது குழந்தையை தூங்க வைக்க தோளில் படுக்க  வைத்து கொண்டு நடப்பது, தொட்டிலை ஆட்டுவது, பால்  கொடுப்பது போன்ற வழிமுறைகளை பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு  செய்வதால்  குழந்தை அந்த முறைக்கு பழகி விடுகிறது. குழந்தை தானாக தூங்க கற்று கொள்வதில்லை. பிறகு எப்போது தூக்கம் வந்தாலும் அதே போன்ற முறைகளை எதிர்பார்க்கும், தூங்கிய பிறகு படுக்கையில் படுக்க வைத்தால் இலேசான சத்தம் கேட்டாலும் எழுந்து கொள்ளும், பிறகு பெற்றோர்  அதே முறைகளை  கடைபிடிக்க வேண்டியிருக்கும். எனவே இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நான்கு வயது முதல் குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள், புதிய விஷயங்களை கற்று கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே எளிதில் தூங்க மறுப்பார்கள். 

சில பெற்றோர்கள் குழந்தைகளை பகலில் தூங்குவதற்கு வற்புறுத்துவது உண்டு. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பகலில் தூக்கம் அவசியம் இல்லை, எனவேதான் ஐந்து வயதிற்கு பிறகு முழுநேர பள்ளி நடத்த படுகிறது.


குழந்தைகளை தூங்கவைக்க பயமுறுத்தும் கதைகள், தூங்கா விட்டால் பூச்சாண்டி வந்து பிடித்து கொண்டு போய்விடுவான் என்று கூறுவதை சில பெற்றோர்கள் கடைபிடிகிறார்கள், அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு பல்வேறு பயத்தை உண்டுபண்ணும். சில மனிதர்கள், நிழல் போன்றவற்றை பார்த்து பயப்படுவார்கள்.



தூங்க வைப்பதற்கு சில பெற்றோர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள். இவ்வாறு  செய்வதால் குழந்தைகளுக்கு சிறுவயது தூக்கம் பற்றிய பயமுறுத்தும் நினைவுகளை உண்டாக்கும்.

பதின்பருவ குழந்தைகள் தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் அவர்களின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும், அதற்கு தேவையான ஹார்மோன்கள் தூங்கும் நேரத்தில்தான் அதிகமாக சுரக்கும். எனவே சரியான தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் இன்றைய போட்டி மிகுந்த உலகம் குழந்தைகள் அதிகமாக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற pressure  அவர்களை சரியாக தூங்க விடுவதில்லை. 
இன்றைய காலத்தில் mobile , internet  மூலம் தூக்கத்தை குறைத்து கொள்கிறார்கள். எனவே குழந்தையின் பெட்ரூமில் டிவி, கம்ப்யூட்டர் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

தூக்கும் நேரம் என்பது நேர விரயம் என பல பெற்றோர்கள் என்னிடம் கூறுவதை கேட்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொல்வது இதுதான் '' நமது மூளையின் சுறுசுறுப்பு தன்மையை புதுப்பிக்க தூக்கம் மிகவும் அவசியம். எனவே தூங்கும் நேரம் விரயம் அல்ல என்பதுதான்''

தினமும் ஒரே நேரத்தில் தூங்க வைப்பது நல்லது .   

தூங்க வைப்பதற்கு முன்; 

இனிமேல் உங்கள் குழந்தையின் தூக்கத்தை சந்தோசமாக மாற்றுங்கள் 
SWEET DREAMS

Thursday, October 6, 2011

குழந்தைகளுக்கு மொட்டை எப்போது அடிக்கலாம்?


பச்சிளம் குழந்தைகளின் உச்சந்தலையில் Anterior  fontonelle  எனப்படும் சிறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கபால எலும்பு இருக்காது, தோல் மற்றும் ஒரு தசை மட்டுமே மூளையை மூடிக்கொண்டு இருக்கும். இந்த  Anterior  fontonelle  முழுவதுமாக எலும்பாக மாறுவதற்கு குறைந்தது 12  மாதங்கள் ஆகும். 

குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கும் போது வலியினால் தலையை ஆட்டும், தவறுதலாக கத்தியினால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு  Anterior  fontonelle  மூடாமல் இருப்பதால் இந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் மூளையில் வெட்டுபட வாய்ப்பு உள்ளது. இதனால் மூளையில் இரத்தகசிவு, வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
எனவே குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதாக இருந்தால் ஒரு வயதிற்கு பிறகு அடிக்கலாம்.

பின் குறிப்பு: என்னிடம் வந்த 12  நாள் குழந்தைக்கு மொட்டை அடித்திருந்ததை பார்த்த பிறகே இந்த பதிவு.

Friday, August 19, 2011

பேபி வாக்கர் பயன்படுத்தலாமா?


வாக்கர் பயன்பாடுதுவதால் குழந்தை சீக்கிரம் நடக்க ஆரம்பிக்கும் என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. மேலும் இது பாதுகாப்பானது அல்ல.குழந்தைகள் வாக்கரில் நடக்கும்போது வாக்கரில் உள்ள  சக்கரத்தினால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓட ஆரம்பிக்கும். எனவே எதிரில் ஏதேனும் தடை இருந்தால் உடனே நிறுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம்.

ஒவ்வொரு வருடமும் இதனை பயன்படுத்தும்  நிறைய குழந்தைகள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். பல மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.எனவே வாக்கர் பயன் படுத்துவதை 
தவிர்க்கவும்.
STATIONARY WALKERS எனப்படும் சக்கரம் இல்லாத வாக்கர் பயன்படுத்துவதில் தவறில்லை